
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வும் நினைவேந்தலும் இன்று (14.11.2026) காலை வவுனியா மாநகரசபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில், மாவீரர்களின் பெற்றோர்கள் வவுனியா கண்டி வீதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில், பிரதான ஈகைச்சுடரினை மாவீரர்களின் தாயாரான திருமதி செபஸ்தியாம்பிள்ளை புஸ்பவதி ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து, மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி, மலர்தூவி உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






