வவுனியா தெற்கு கல்வி வலயம் தேசிய மட்ட ரோபோ தொழிநுட்பப் போட்டியில் சாதனை!!

36

தேசிய மட்டத்தில் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான ரோபோ தொழிநுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புப் போட்டியில் (All Island School Robot & New Invention Competition 2026) வவுனியா தெற்கு கல்வி வலயம் மொத்தமாக ஆறு (06) இடங்களையும் விருதுகளையும் கைப்பற்றி, மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது.

இன்று (23.11.2026) திங்கட்கிழமை வெளியான இப்போட்டியின் இறுதிப் பெறுபேறுகளின் பிரகாரம், வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மட்டத்தில் இரண்டு முதலாம் இடங்கள், ஏனைய தரவரிசை இடங்கள் மற்றும் மகளிருக்கான சிறப்பு விருதுகள் என மொத்தம் ஆறு சாதனைகளைப் படைத்து வலயத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ரோபோ தொழிநுட்பக் கருப்பொருளில் உற்பத்தித் தொழிற்துறை மற்றும் சூழலியல் ஆய்வுப் பிரிவில் (Production Industry & Env. Stu) வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் தரம் 12 மாணவன் ஆர்.அட்சரன் (R.Adsaran) முதலாம் இடத்தையும் (1st Place) பெற்றுள்ளார்.

புத்தாக்கக் கருப்பொருளில் கல்வி (Education) பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் தரம் 12 மாணவி எஸ். சன்சிகா (S.Sancika) முதலாம் இடத்தையும் (1st Place) தனதாக்கிக் கொண்டுள்ளார்.

மேலும், புத்தாக்கக் கருப்பொருளில் பொறியியல் தொழிநுட்பம் மற்றும் உற்பத்தி (Eng. Tech. & Production) பிரிவில் வவுனியா பண்டாரிகுளம் விபுலாநந்தா கல்லூரியின் தரம் 11 மாணவன் எஸ். கபிலாஷ் (S.Kapilash) 5வது இடத்தைப் பெற்றுள்ளார்.

ரோபோ தொழிநுட்பக் கருப்பொருளில் சுகாதாரம் மற்றும் மருத்துவம் (Health & Medical) பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் தரம் 12 மாணவி டி. மிதுஸ்டிகா (T.Mithusdiga) 9வது இடத்தைப் பெற்றுள்ளார்.

அத்துடன், மகளிருக்கான சிறப்பு விருதுகள் (Girls’ Award) பிரிவில், ரோபோ – சுகாதாரம் மற்றும் மருத்துவம் (Robot – Health & Medical) பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் தரம் 12 மாணவி டி. மிதுஸ்டிகா (T.Mithusdiga) சிறப்பு விருதையும், புதிய கண்டுபிடிப்பு – கல்வி (New Invention – Education) பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் தரம் 10 மாணவி எஸ்.மேகவி (S. Mekavi) சிறப்பு விருதையும் பெற்று வலயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் மாணவர்களின் ஆற்றலை வளர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட தொடர் பயிற்சிகள், நெறியாளர்களின் வழிகாட்டல்கள், பாடசாலை நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மற்றும் மாணவர்களின் அயராத முயற்சியாலேயே இந்த மகத்தான வெற்றி சாத்தியமாகியுள்ளது.

தேசிய ரீதியில் பெரும் போட்டிகளுக்கு மத்தியில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுத் தந்த மாணவர்களுக்கும், அவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் கல்வி அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.