வவுனியா, இலங்கைத் திருச்சபை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி!!

628

teacher's day

எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எமது ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் நன்னாள் இன்றாகும். இந்த நன்னாளில் ஆசிரியர்களுக்கு எமது ஆசிரியர் நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

அற்புதமான அர்ப்பணிப்புக்கள், கடினமான உழைப்புக்கள் மூலம் எதிர்கால சமூகத்தை வடிவமைக்கும் பாரிய பொறுப்பினை பெரும் சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்ற எமது ஆசிரியர் சமூகத்திற்கு தலைவணங்குகின்றோம்.

மாணவர்களை சிறந்த மனிதனாக உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? சமூதாயத்தில் மாணவ, மாணவிகளின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக்கொடுக்கின்றனர்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போலவே மாணவ சமூகமும் குறிக்கோள், இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருள் மயமானதாகிவிடும் என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவர்களின் மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர் மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வு பூர்வமாக உணர முடியும்.
சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும்.

அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராகவும். ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் கற்றுக்கொடுத்து அவர்களை நல்லவர்களாக, பண்புள்ளவர்களாக, சமூகத்தில் சிறந்தவர்களாக, அறிஞர்களாக, மேதைகளாக சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் உயரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

ஒரு தமிழ் பாடலில் சொன்னது போல ‘அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான்’.

‘ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவர்களுடன் ஆற்றங்கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்துவிட்டு அவர், ‘நான் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன்‘ என்று அவர் தயாராகுவதற்குள் அவரின் ஒரு மாணவன் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறுகரை வரை சென்று திரும்பிய அந்த மாணவன், குருவே சுழல்கள் இல்லை நாம் தைரியமாக ஆற்றைக் கடக்கலாம் என்றான்.

அந்த நிலையில் அரிஸ்டாட்டில் உன்னை சுழல்கள் இழுத்து சென்றிருந்தால். என்றார். அதற்கு ‘இந்த அலெக்சாண்டர் போனால் ஆயிரம் அலெக்சாண்டரை உருவாக்கும் வல்லமை கொண்டவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம்’ என்றான் அந்த மாணவன். அதேபோலத்தான் ‘எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு’ என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்.

ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி இன்றைய வகுப்பறைகளில் தான் உருவாப்படுகிறது. எனவே ஆசிரியர்களினால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களையும் தலைவர்களையும் பெற்று முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த உண்மைகள் நிலைத்து நிற்கவேண்டும் என்றும் உங்கள் பணி சிறக்கவேண்டும் என்றும் இந்த நன்னாளில் வாழ்த்துகின்றோம்.

நன்றி
என்றென்றும் நன்றியுடன்
பழைய மாணவர் சங்கம்.
இலங்கைத் திருச்சபை தமிழ் மகா வித்தியாலயம்.
வவுனியா