கதாநாயகனாகின்றார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தீபக்!!

744

Deepak

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரை இயக்கியவர் சக்திவேல். இவர் தற்போது இவனுக்கு தண்ணில கண்டம் என்ற புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

படத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்கும் இப்படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, எல்லோரையும் எளிதில் கவரும், ஏற்கெனவே மக்களிடையே பிரபலமான வசனம் தலைப்பாக இருந்தால் படம் அவர்களிடத்தில் எளிதாக சென்று சேரும்.

அதிலும் கதைக்கும் அந்த தலைப்பு பொருத்தமாக அமைந்துவிட்டால் அது அதிர்ஷ்டம்தான். அந்த அதிர்ஷ்டம் தற்போது இந்த படத்துக்கு கிட்டியுள்ளது என்று தலைப்பு குறித்து விளக்கமளித்த இயக்குனர் மேலும் கூறும்போது,

நகைச்சுவை கலந்த கதைகளுக்கு சின்னத்திரை, பெரியத்திரை என்ற பேதம் இல்லை. சமீபத்திய இளைஞர்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களின் அடிப்படையில் நகைச்சுவை கலந்து உருவாகும் படம். இந்த படத்தின் தலைப்பே படத்தின் கதையை சொல்லும்.

துரித வேகத்தில் படப்பிடிப்பையும் முடித்து, டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறோம். இவனுக்கு தண்ணில கண்டம் முழுக்க முழுக்க எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்றும் கூறினார்.

ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் பற்றிய கதை என்பதால் இப்படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் நேஹா நடிக்கவுள்ளார்.

இவர்களுடன் பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சென்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடித்து உள்ளனர்.

ஏ7 என்ற ஒரு புது இசை குழு இசை அமைப்பாளர்களாக அறிமுகமாக, கானா பாலா, யுகபாரதி மற்றும் கண்ணன் பாடல்களை இயற்றி உள்ளனர். ஆர்.வெங்கடேசன் ஒளிப்பதிவு செய்கிறார்.