2013ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தொடர்பில் வெட்டுப்புள்ளி குறைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமையன்று வெளியிடப்படவுள்ளன. கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கு இணங்க இந்த புள்ளிக்குறைப்பு இடம்பெறுவதாக அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையின் போது ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 15ஆயிரத்தில் இருந்து 25ஆயிரமாக உயர்த்தப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இதற்கமைய சிங்கள மொழி மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் 163இல் இருந்து 157ஆக குறைக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழி மூல புள்ளிகள் 159இல் இருந்து 152ஆக குறைப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பாடசாலை மட்டத்திலான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதியன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதியின் திட்டத்துக்கு அமைய மாணவர் ஒருவர் ஒரு விடைத்தாளுக்கு 35புள்ளிகளை பெற்றிருந்தால் அத்துடன் இரண்டு விடைத்தாள்களுக்கும் 70 புள்ளிகளை பெற்றிருந்தால் அவர் சித்தியெய்தியவராக கருதப்படுவார்.
பரீட்சைகள் ஆணையாளரின் தகவல்படி 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதியன்று வெளியிடப்பட்ட ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபெறுகளின் நிமித்தம் 258,000 பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.
இதில் 15ஆயிரம் பேரே புலமைப்பரிசில் உதவுத்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் சித்தியடைந்த மாணவர் தொகை, இன்னும் 10ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது.
அதேநேரம் புலமைப்பரிசில் உதவுத்தொகையும் 500 ரூபாவில் இருந்து 1500ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.