இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விராத் கோலி சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.
இந்தியா சென்றுள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே தொடரை இந்தியா 4-0 என கைப்பற்றி விட்டது. ஐந்தாவதும் இறுதியுமான போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் மத்யூஸ் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
இதனையடுத்து இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. இந்திய அணியில் ரெய்னாவுக்கு பதில் கேதர் ஜாதவ் இடம்பிடித்தார். இதே போல வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அஷ்வின் வாய்ப்பு பெற்றார்.
இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் மத்யூஸ் ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களைப் பெற்றதோடு திரிமன்ன 52 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்கர்னி 3 விக்கெட்களை வீழத்தினார்.
பதிலுக்கு 287 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.
இந்திய அணி சார்பில் அணித் தலைவர் கோலி 139 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். ராயுடு 59 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என முழுமையாக கைப்பற்றி கிண்ணத்தை வென்றது. ஆட்ட நாயகன் விருதை இலங்கை தலைவர் மெத்யூஸ் வென்றார். தொடர் நாயகன் விருது இந்திய அணித் தலைவர் விராத் கோலிக்கு வழங்கப்பட்டது.