இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முதலாவது போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில், இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இரண்டாவது போட்டி ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முன்னதாக மழை காரணமாக போட்டி 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் 43வது ஓவரிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இங்கிலாந்து 185 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஜந்த மெண்டிஸ் மூன்று விக்கெட்டுக்களையும், தில்ஷான் மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி 186 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 34.2 ஓவர்களில், 2 விக்கெட்டுக்களை மட்டுமே பறிகொடுத்த நிலையில் இலக்கை (186) எட்டியது.
இதன்படி 64 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றியை ருசித்தது. இலங்கை அணி சார்பில் மஹெல ஜெயவர்த்தன 77 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 67 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
இதன்படி ஏழு போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. இதேவேளை இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக மஹெல ஜெயவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.