இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 242 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் குமார் சங்கக்கார 63 ஓட்டங்களை விளாசினார். முன்னதாக அவர் 13 ஒட்டங்களை எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 4வது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
37 வயதான சங்கக்கார இதுவரை 386 போட்டிகளில் விளையாடி 19 சதத்துடன் 13,050 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இந்த வகையில் முதல் 3 இடங்களில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (18,426), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (13,704), இலங்கையின் ஜெயசூர்ய (13,430) ஆகியோர் உள்ளனர்.
இதேவேளை இங்கிலாந்து துடுப்பெடுத்தாடிய வேளை, குக்கை (34) விக்கெட் காப்பாளராக இருந்த சங்கக்கார பிடி எடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.
இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிகம் பேரை ஆட்டம் இழக்க செய்த விக்கெட் காப்பாளர் என்ற உலக சாதனையை படைத்தார்.
அவர் இதுவரை 473 பேரை (386 ஆட்டம்) வெளியேற்றி இருக்கிறார். அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் கில்கிறிஸ்ட் 472 பேரை (287 ஆட்டம்) ஆட்டமிழக்கச் செய்தமையே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.






