இங்கிலாந்தை 6 விக்கட்டுகளால் வீழ்த்திய இலங்கை அணி!!

363

SL

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மொயீன் அலி, ஹால்ஸ் களமிறங்கினர். ஹால்ஸ் டக்-அவுட் ஆக வெளியேற மொயீன் அலி 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் டெய்லர், ரூட் ஜோடி சேர்ந்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். ரூட் 36 ஓட்டங்களில் ஹேரத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பொறுமையாக விளையாடிய டெய்லர் 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.



பின்னர் போப்பரா (22), மோர்கன் (62), பட்லர் (15) ஆகியோர்களும் தங்கள் பங்கிற்கு ஓட்டங்கள் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 50 ஒவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை தரப்பில், டில்ஷான், ஹேரத், அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தம்மிக்க பிரசாத் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

266 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டில்ஷான் (16) மற்றும் குசால் பெரேரா (31) ஆகியோர் நல்ல தொடக்க கொடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த சங்கக்கார, ஜெயவத்தன அணியின் ஓட்டங்களை அதிகப்படுத்தினர். சங்கக்கார வழக்கம் போல் அரைசதம் கடந்தார். ஜெயவர்த்தன அரைசத வாய்ப்பை நழுவ விட்டார்.
சங்கக்காரா 86 ஓட்டங்களும், ஜெயவர்த்தன 44 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து அணித்தலைவர் மத்யூஸ், திரிமன்ன ஆகியோர் பொறுமையாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர். மத்யூஸ் 51 ஓட்டங்களும், திரிமன்ன 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இலங்கை அணி 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டியது.

இங்கிலாந்து தரப்பில், வோக்ஸ், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டுகளையும், ஜோடன் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இவ் வெற்றியின் மூலம் இலங்கை அணி 7 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணியின் சங்கக்கார ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.