தென்னாப்பிரிக்காவில் மனைவியை கொன்ற வழக்கில் இருந்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன்வாழ் இந்தியத் தொழிலதிபரான ஷ்ரைன் தேவானி, கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மனைவி அன்னி ஹிண்டோச்சா என்பவருடன் தேனிலவு கொண்டாட தென்னாப்பிரிக்க நாட்டுக்கு சென்றிருந்தார்.
அப்போது அவரது மனைவி அன்னி, மர்மமான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், தேவானிதான் தனது மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து தென்னாப்பிரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின்படி, கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேவானியை பிரிட்டிஷ் பொலிசார் கைது செய்தனர்.
பின்னர் தேவானியை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டனிடம் தென்னாப்பிரிக்க அரசு கோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவிடம் அவரை ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
பிரிட்டன் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அதிகாரிகளிடம் தேவானி ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் பிரிட்டனில் இருந்து தனியார் விமானத்தில் கேப்டவுன் நகருக்கு அழைத்து வரப்பட்ட அவர், வெஸ்டர்ன் கேப் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தேவானி மீது கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறைக்கு எதிராகச் செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட்டன.
இந்நிலையில், அன்னியின் மரணம் தொடர்பான இந்த வழக்கில் இருந்து ஷ்ரைன் தேவானி விடுவித்து வெஸ்டர்ன் கேப் உயர் நீதிமன்ற துணை நீதிபதி ஜேனட் ட்ராவர்ஸோ இன்று உத்தரவிட்டார்.
ஷ்ரைன் தேவானி தான் கூலிப்படையை ஏவி தனது மனைவியை கொன்றார் என்பதை நிரூபிக்கத் தக்கவையாக பொலிசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லை.
இவற்றை வைத்து இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு இந்த நீதிமன்றம் தண்டனை அளித்துவிட முடியாது.
எனவே, அவரை விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி ஜேனட் ட்ராவர்ஸோ உத்தரவிட்டுள்ளார்.