பாஜக கூட்டணியிலிருந்து விலகிய வைகோவின் மதிமுக!!

687

Vaiko

பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற்றிருந்தது.

இந்த கட்சிக்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டும், அனைத்திலும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தாலும், அக்கட்சியின் செயல்பாடுகளில் ஆரம்பத்தில் இருந்து மதிமுகவை அதிருப்தியடைய செய்ததாக தெரிகிறது.

மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவை அழைத்தது, மீத்தேன் எரிவாயு திட்டம், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார்.



இலங்கை பிரச்னையில் வாஜ்பாய், அத்வானியை போல பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை இல்லை என்று கூறிய வைகோ, தமிழக மீனவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதில் ராஜபக்சேவுடன் இணைந்து நரேந்திர மோடி நாடகமாடியுள்ளார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

வைகோவின் இந்த செயல் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது, மோடி பற்றி கருத்து தெரிவித்த வைகோவுக்கு, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இவ்வாறு தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் மோதல் வலுத்துவந்த நிலையில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர்நிலைக்குழு கூட்டம் ஆகியவை சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்திச் சென்றபோது, கூட்டணி கட்சிகளிடம் இருந்த அணுகுமுறை, தற்போது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ. கூட்டணியில் இல்லை.

எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுகிறது என்று அறிவித்துள்ளார்.