இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 4-2 என கைப்பற்றிய இலங்கை அணி!!

387

SL

இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றியீ்ட்டியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முன்னதாக இடம்பெற்ற ஐந்து போட்டிகளில் இலங்கை மூன்றிலும் இங்கிலாந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3-2 என இலங்கை முன்னிலையில் இருக்க, இரு அணிகளுக்கும் இடையிலான ஆறாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.



இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரரரான மஹெல ஜெயவர்த்தன 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

எனினும் நிதானமாக ஆடிய டில்ஷான் 68 ஒட்டங்களுடன் வெளியேற, குமார் சங்கக்கார அதிரடியாக 112 ஓட்டங்களைக் குவித்தார்.

ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த இலங்கை 292 ஓட்டங்களைக் குவித்தது.

இதனையடுத்து 293 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, 41.3 ஓவர்களிலேயே 202 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

அந்த அணி சார்பில் ஜோ ரூட் அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணிசார்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும் சஜித்திர சேனாநாயக்க 3 விக்கெட்டுக்களையும் டில்ஷான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 4-2 என இலங்கை வசமாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டி எதிர்வரும் 16ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.