பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரிக்கு மரண தண்டனை!!

266

court

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பாடசாலை ஒன்றினுள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 மாணவர்கள் உள்ளிட்ட 149 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து அந்த நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்தனர். இதன்படி தண்டனை விதிக்கப்பட்டிருந்த வைத்தியர் உஸ்மான் மற்றும் அர்ஷத் மெஹ்மூத் ஆகிய இரு தீவிரவாதிகளுக்கு, வெள்ளிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூக்கிலிடப்பட்ட ஒருவரான வைத்தியர் உஸ்மான், இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் வீரர் என்பதோடு, 2009 ல் ராவல்பிண்டி இராணுவத் தலைமையகம் மீதான தாக்குதலில் ஈடுபட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர் தடை செய்யப்பட்ட இயக்கமான லஷ்கர்-இ-ஜாங்வியின் உறுப்பினராவார். மேலும் 2009ம் ஆண்டு லாகூரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி எனவும் இவர் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மற்றையவரான அர்ஷத் மெஹ்மூத், பர்வேஸ் முஷாரஃப்பை 2003ம் ஆண்டு படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர். அத்துடன் தீவிரவாத இயக்கம் ஒன்றுடன் தொடர்புபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.