இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது.
அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் 48 ஓட்டங்களாலும், பிரிஸ்பேனில் நடந்த 2வது டெஸ்டில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும் தோற்றது.
இதற்கிடையே 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் வீரர்களின் அறையில் அணியின் துணை தலைவரான வீராட் கோலிக்கும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகார் தவானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
4வது நாள் அட்டம் தொடங்கும் போது ஷிகார் தவானும், புஜாராவும் களம் இறங்க வேண்டும். பயிற்சியின் போது தவான் காயம் அடைந்ததால் வீராட் கோலி புஜாராவுடன் இணைந்து ஆடினார்.
ஆனால் கோலியால் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. 11 பந்துகளை சந்தித்து ஒரு ஒட்டத்துடன் ஜோன்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.
2வது புதிய பந்தால் எளிதில் ஆட்டம் இழந்த கோலி வீரர்களின் அறைக்கு திரும்பும் போது தவான் மீது கடுமையாக கோபப்பட்டார். தான் எளிதில் ஆட்டம் இழந்ததற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி தவானை குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து குற்றம் சாட்டியதால் தவானும் பதிலடி கொடுத்தார். நாட்டுக்காக விளையாடுவதை நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கு பொய்யான காயம் இல்லை என்று கூறி வாக்குவாதம் செய்தார். இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியதால் வீரர்கள் அறையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதன் காரணமாகவே வீரர்களின் அறையில் அமைதியின்மை ஏற்பட்டதாக தோனி தோல்விக்கு பிறகு நிருபர்களிடம் தெரிவித்தார்.






