இலங்கை மக்களும் அண்டை நாடுகளும் சர்வதேசமும் ஆவலோடு எதிர்பார்த்த 7வது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து. அதிமேதகு மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஜனாதிபதியாக சுப நேரத்தில் பதவியேற்று தன்னுடைய கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
இலங்கையின் அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாகவே இது பார்க்கப்படுகின்றது. 2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்து தமிழ் மக்கள் வாக்களிக்காமையால் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகும் வாய்ப்பை வழங்கிய தமிழ் மக்கள் இத் தேர்தலில் அவருக்கு எதிராக 9 லட்சத்திற்கும் அதிகமான வடக்குக் கிழக்கு மக்கள் வாக்களித்தன் மூலம் அவரது தோல்விக்கு வழிவகுத்தது மட்டுமன்றி அதி மேதகு மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வதைத் தீர்மானிக்கும் சக்தியும் பலமும் கொண்டவர்கள் என்பதையும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட யுத்தக் கொடுமைகள், சிறைகளில் நீதி விசாரணைகள் இன்றி தமது உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருத்தல், குடும்ப ஆட்சி, ஊழல், நீதித் துறையின் சுயாதீனமின்மை, ஊடக அடக்கு முறை, காணிச் சுவீகரிப்புக்கள், வேலைவாய்ப்புக்களில் அரசியல் ரீதியான புறக்கணிப்புக்கள், என்பவற்றிற்கு எதிராகவும் ஆட்சி மாற்றத்தை வேண்டியும் தமிழ் மக்கள் வாக்களித்த முக்கிய தேர்தல் இதுவாகும்.
மகிந்த தரப்பினார் தேர்தல் மேடைகளிலும் அரச சார்பு தொலைக்காட்சிகளின் அதிர்வு உட்பட்ட நிகழ்வுகளிலும், இந்து மதகுருபீட முக்கியஸ்தர்களின் நேர்காணல்களிலும், யுத்த வெற்றிகள், சமாதானம், அபிவிருத்தி, புலிகளின் மீள்எழுச்சி, புலம் பெயர் தமிழர்கள், தமிழ்க் கூட்மைப்பினர் போன்றவைகளைப் பிரதான பேசு பொருளாக- வாக்கு வங்கியை பலப்படுத்த கையாண்ட உத்திகளாக பயன்படுத்திய போதும் தமிழ் மக்கள் அதற்கு மசியவில்லை, மசியமாட்டார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கான முட்டுக்கட்டைகளைப் போக்குதல், நீண்டகாலமாகப் புரையோடிப் போயுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் நிரந்தரமானதும் நீதியானதுமான அரசியல் தீர்வொன்றை காணுதல் உள்ளிட்ட விடயங்களின் வெளிப்பாடாகவும் வாக்களிப்பில் எமது மக்கள் காட்டிய ஆர்வத்தினைக் கொள்ளலாம்.
ஆகவே இவ்வுயரிய பணிக்காக தங்கள் வாக்குகளை வழங்கி ஜனாதிபதியினை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர்த்திய மக்களுக்கும் கூட்டமைப்பின் வேண்டுதலை மதித்து செயற்பட்டமைக்காகவும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத் தேர்தல் பணிகளுக்காக உழைத்த எமது பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் எமது நன்றிகளுக்கு உரியவர்களாவார்கள். தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காண்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை புதிய ஜனாதிபதி எடுப்பதுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடியான வாக்குறுதிகளை நிறைவேற்றி நாட்டில் நல்லாட்சி மலர மனதார உழைப்பார் என எதிர்பார்க்கின்றோம்.
அதற்கான நல்லெண்ண ஆரம்ப நடவடிக்கையாக வட மாகாணத்தின் ஆளுனராக ராணுவ அதிகாரி ஒருவார் பணியாற்றிய நிலையை உடனடியாக மாற்றியமைத்தமையை தமிழ் மக்களாகிய நாம் மனதார வரவேற்கின்றோம்.
தங்களது இத்தகைய நல்ல பணிகளை வரவேற்று எதிர்பார்த்து தாங்கள் ஜனாதிபதியாகப் தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றமைக்காக எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இ.இந்திரராசா
வடக்கு மாகாண சபை உறுப்பினார்.