மழை காரணமாக இன்று இடம்பெற்ற இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை, முன்னதாக நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மேலும் இதுவரை இடம்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டி 1-1 என சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி ஆக்லேண்டில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 28.5 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளது.
முன்னதாக மழை காரணமாக 50 ஓவர்கள் கொண்ட போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் போட்டி கைவிடப்பட்ட வேளை, நியூசிலாந்து சார்பாக அதிரடியாக ஆடிய மார்டின் கப்டில் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். இரு அணிகளும் மோதும் நான்காவது போட்டி எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளது.






