வவுனியா புகையிரதநிலைய வீதியின் இருபுறத்திலும் போக்குவரத்திற்கு தடையாக குவிந்து கிடக்கும் கற்குவியல்கள் : விமோசனம் எப்போது பொதுமக்கள் கேள்வி!!

269

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதிக்கு அண்மையில் வீதி அபிவிருத்திக்கென நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்து கொட்டி குவிக்கப்பட்டிருக்கும் கற்குவியல்களால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வியாபரத்தலங்கள், தனியார் கல்விநிலையங்கள் அதிகளவில் அமைந்துள்ள இந்த புகையிரத நிலையவீதியில் கொண்டு வந்து போடப்பட்டிருக்கும் கற்குவியல்களினால் மிகவும் நெருக்கடி மிக்க போக்குவரத்துக்கு பாதையாக வைரவபுளியங்குளம் மாறியுள்ளதாக அதனூடாக போக்குவரத்து செய்யும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இப் புகையிரத நிலையவீதி ஊடாக பகலில் ஓரளவு பயணம் செய்யகூடியதாக இருந்தாலும் ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக வாகனங்கள் செல்வதற்கு சிரமமாகவே உள்ளது. இரவுவேளைகளில் சொல்லவே தேவையில்லை. வயதுமுதிர்ந்தவர்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று துவிச்சக்கர வண்டிகளில் வீடு திரும்பும் மாணவ மாணவியரும் கடும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வியாபாரநிலையங்கள் மற்றும் அங்குள்ள குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன்னால் கிடக்கும் இக் கற்குவியல்களால் தங்களுடைய வாகனங்கள் மற்றும் வியாபாரத்தலங்களுகுரிய பொருட்களை ஏற்றி இறக்குவதிலும் சிரமாக உள்ளதாக அறியமுடிகிறது.

தங்கள் வீடுகளுக்கு வாகனங்களில் வரும் உறவினர்கள் வாகனங்களை தூர இடத்தில் அல்லது ஒழுங்கைகளுக்குள் நிறுத்திவிட்டு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவின் மிக முக்கியமான இந்த புகையிரதநிலைய வீதிஎப்போது திருத்தப்படும்? பொதுமக்கள் எப்போது நிம்மதியாக போக்குவரத்து செய்யமுடியும்? மாணவர்கள் எப்போது நிம்மதியாக பயணிக்க முடியும்? வியாபாரிகள் எப்போது தங்களது நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படும்? குடியிருப்பாளர்கள் எப்போது தங்களது வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்தமுடியும்? வீதி அபிவிருத்தி அதிகார சபை, நகரசபை மற்றும் வீதிப்போக்குவரதுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் தூக்கத்திலா என பல்வேறுபட்டகேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வவுனியா நகரசபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே இதனை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.

உடனடியாக புகையிரத நிலைய வீதியை மக்களுக்கு பாதுகாப்பான முறையில் போக்குவரத்து செய்யகூடிய வகையில் மாற்று ஏற்பாடு ஒன்றை செய்யும்படியும். அல்லது விரைவாக இந்த வீதியை புனரமைப்பு செய்யுமாறும் அப்பிரதேசத்தில் குடியிருக்கும் மற்றும் வியாபாரம் செய்யும் அத்துடன் வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் சார்பிலும் இக்கோரிக்கையை உங்களிடம் விடுக்கின்றோம்.

-பண்டிதர்-

1 2 3 4 5 6