பிரேசில் நாட்டில் இளம்பெண் ஒருவர் தான் அணிந்த உள்ளாடையால் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகே பேலம் பகுதியில் குளோபோ-இவாட்டே மெட்டிரியாஸ் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டுக்கு தேவையான பொருட்களை வணிக வளாகத்தில் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது வணிக வளாகத்தின் எதிர்பக்கம் துப்பாக்கியுடன் வலம் வந்த திருடன் ஒருவன் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை நகை, பணத்தை கொடுக்குமாறு மிரட்டி கொண்டிருந்தான்.
இந்நிலையில் அந்நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு குண்டு இவாட்டேவின் இடதுபக்க மார்பு மீது பாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் மயக்கமாகி கீழே விழுந்த இவாட்டே இறந்துவிட்டதாக அவரது கணவர் கருதியுள்ளார்.
ஆனால் இவாட்டேவின் உடைகளை சோதித்த கடை உரிமையாளர், அவரது ஆடையை துளைத்து சென்ற துப்பாக்கி குண்டு, உள்ளாடையின் அடியில் கனத்த கம்பி வலையில் சிக்கி கொண்டிருந்தை கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவாட்டே, தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
இதுகுறித்து இவாட்டே கூறுகையில், கடவுள்தான் இந்த உள்ளாடையை அளித்தார் என்று கருதுகிறேன் என்றும் இது மட்டும் இல்லை என்றால் இந்நேரம் இறந்து போயிருப்பேன் எனவும் உருக்கத்துடன் கூறியுள்ளார்.






