வவுனியாவில் நாளை மாபெரும் போராட்டம்!!

589

Poorattam

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். இந்நிலையில், போரால் பாதிப்புற்ற மக்களுக்காக இந்திய அரசின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், அநீதிகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கக் கோரியும் நாளை புதன்கிழமை வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி இடம்பெறவுள்ளது.

மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் இணைந்து இந்தக் கவனயீர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. இந்தக் கவனயீர்ப்புப் பேரணி நாளை காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆரம்பித்து மாவட்ட செயலகத்தைச் சென்றடையும்.

அங்கு வவுனியா அரச அதிபர் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் மகஜர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

இந்தக் கவனயீர்ப்புப் பேரணி குறித்து மீளக்குடியமர்ந்தோர் நலன்பேணும் அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு..

போரால் பாதிப்புற்று – பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்து – பல்வேறு அழுத்தங்களின் மூலம் மீளக்குடியேறிய மக்களுக்குத் தமது காணிகளில் சொந்தவீடு கட்டிக்கொண்டு வாழ்வாதாரத்தை மீளக்கட்டியயழுப்புவதற்காக இந்திய அரசு 50,000 வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வந்தது.

ஆரம்பத்தில் இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கே அந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், முந்தைய அரசு தனது இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் அதனை நாடு முழுவதிலுமுள்ள பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க இந்திய அரசை இணங்கவைத்தது.

இதன் மூலம் இலங்கை அரசு வன்னி நிலப்பரப்பில் ஏற்பட்ட சேதத்தைக் குறைத்துக் காட்ட முயற்சித்தது. அவ்வாறு வழங்கப்பட்ட வீடுகளும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாமல் அரசியல் தலையீடுகளின் மூலம் தடையேற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த நிலைமை தொடர்வதற்கு நாம் தொடர்ந்து இடமளிக்கமுடியாது. தமிழர்களுக்கான நீதியை வழங்கக் கோரியும் இவ்வாறான கவனயீர்ப்புப் பேரணியை ஏற்பாடுசெய்துள்ளதுடன் தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டுவதற்கும், பாதிப்புற்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மேற்கொள்ளப்படுகின்ற இந்தப் பேரணியில் வீட்டுத்திட்டம் கிடைக்காத அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறும், தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட சமுதாயத்தின் சகல மட்டத்திலிருந்தும் அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் மக்கள் நலன்பேணும் நாம் நாடி நிற்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மலரும்-