புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் : மங்­கள சம­ர­வீர!!

558

Mngala

இலங்­கை­யினால் தடைவிதிக்­கப்­பட்­டுள்ள 16 அமைப்­புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடை குறித்து அர­சாங்கம் மீளாய்வு செய்­ய­வுள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் இலங்கையுடன் முரண்பட்டிருந்த ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன. இது எமக்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜுன் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினர் இலங்கை வரவுள்ளார். இது எமது குற்றமற்றத் தன்மையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பமாகுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை சட்டத்தின் ஒழுங்கு விதிகள் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.

சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பது, அதற்கு பணம் வழங்குவதை நிறுத்துவது, கறுப்புப் பணப் பரிமாற்றம் மற்றும் அதனோடு தொடர்புடைய தரப்புக்களை தடுப்பதற்கான சட்டவிதிமுறைகள் 2012 ஆம் ஆண்டு ஐ.நா பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலிபான் அறிக்கை அமைப்புகளுடன் தொடர்புடைய அமைப்புக்களை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆயுதங்கள் கொள்வனவு, பணம் வழங்கல்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கேற்றவாறு ஐ.நா மற்றும் ஜனநாயக சரத்துக்களுக்கு இலங்கை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.ஆசிய பசுபிக் குழு கறுப்புப் பணம் பறிமுதல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பாகவும் டிசம்பர் பிரகடனம் 1267 மற்றும் 1373 இன் கீழ் பாதுகாப்பு சபையில் தீர்மானம் சட்டமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கையின் மத்திய வங்கியிலும் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.பணம் கொடுக்கல் வாங்கல் திருத்தங்கள் தொடர்பில்
இலங்கையின் சட்டவரைவுக்குள் சர்வதேச நிதி மற்றும் பயங்கரவாத தடைக்கு ஏற்றவாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமது நாட்டிலும் நீண்ட காலமாக பிரச்சினை தலைதூக்கியிருந்தது. இதனை இன நெருக்கடி என்ற அடிப்படையிலேயே நோக்க வேண்டும்.
ஐ.நா சபை 60 ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது. நாம் அவ் அமைப்பில் 1955 ஆம் ஆண்டு தொடக்கம் உறுப்புரிமை பெற்று வருகிறோம். அத்தோடு ஐ.நா சட்டங்களை மதித்து எமது சட்ட வரையறைக்குள் நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

கடந்த கால ஆட்சியாளர்கள் ஐ.நாவுடன் மட்டும் அல்லாது சர்வதேச நாடுகளுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நெருக்கடியில் நாட்டை தள்ளிவிட்டிருந்தது.
சர்வதேச ரீதியில் நட்புறவுகள் பேணப்படவில்லை. எனவே ராஜதந்திர உறவுகள் விரிசலடைந்திருக்கின்றது.

அந்த நாடுகள் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எமக்கு ஆதரவு வழங்கவில்லை.அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை.ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அரசாங்கத்தில் ஐ.நா உட்பட சர்வதேச நாடுகளுடன் நட்புறவுகளை மேம்படுத்திக் கொண்டுள்ளோம்.

ராஜாந்திர உறவுகள் மேம்பட்டுள்ள எமது அபிவிருத்திற்கு உதவி வழங்க அந்நாடுகள் முன்வந்துள்ளன.கடந்த ஆட்சியாளர்கள் இவ்வாறான நட்புறவுகளை முன்வராத காரணத்தினால் தான் எமக்கெதிராக ஐ.நா வில் தொடர்ச்சியாக பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.

இன்று இறையாண்மை கொண்ட எமது தனித்துவத்தை பாதுகாத்துக்கொண்டு சர்வதேசத்துடன் நட்புறவுகள் பேணப்பட்டு வருகின்றது.ரோமர் பிரகடனத்தில் நாம் கையெழுத்திடவில்லை.

எனவே மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எமது நாட்டு சட்டப்பிரகாரமே கையாள்கிறோம்.அதற்காக எமது நாட்டுக்குள்ளேயே பொறிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். உள்ளகப் பொறிமுறை ஊடாக எமது நாட்டின் பெயரை பாதுகாத்து வருகின்றோம். நாம் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களுக்கு உட்படவில்லை. மாநாடு எமது மக்களின் கோரிக்கைகளை ஏற்றே விசாரணைகளை நடத்துகின்றோம்.

எமது இராணுவத்தினர் ஒழுக்கமுள்ளவர்கள், சட்டத்தை மதிப்பவர்கள் எனவே இன்று ஐ.நா சமாதானப் படையிலும் அங்கம் வகிக்கின்றது. கடந்த தேர்தல் காலத்தில் அரசியல் தேவைக்காக விடுதலைபுலிகள் தொடர்பான புரளி கிளப்பப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாகவும் பீதி கிளப்பட்டது.எதிர்வரும் ஜுன் மாதத்தில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் இலங்கை வரவுள்ளார்.

அவ் விஜயம் எமது நாட்டின் குற்றமற்றத் தன்மையை வெளிப்படுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.அல்கைதா மற்றும் தலிபான் அமைப்புக்களுக்கு எதிராக ஐ.நா நிறைவேற்றிய இரு தீர்மானங்களையும் அமுல்படுத்தும்.