சீகிரியவில் கிறுக்கிய யுவதிக்கு பொதுமன்னிப்பு : ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!!

624

Sikiriya

சீகிரியா வளாகத்தில் கண்ணாடி சுவரில் புரதான எழுத்து வரிகள் உள்ள பகுதியில் இரண்டு சொற்களை கிறுக்கிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளார்.

குறித்த யுவதியை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு செய்த பரிந்துரைக்கு அமைவாக அது தொடர்பான படிவத்தில் ஜனாதிபதி நேற்று இரவு கைச்சாத்திட்டுள்ளார்.

இதனையடுத்து சில தினங்களில் இந்த யுவதி விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நேற்று இரவு பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பு ஒன்றின்போது கருத்து வெளியிட்ட நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இந்த யுவதியை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு நான் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தேன். அதன்படி ஜனாதிபதி இதற்கான படிவத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

அந்த விடயம் எனக்கு அறிவிக்கப்பட்டது. அந்தவயைில் இன்னும் சில தினங்களில் குறித்த யுவதி விடுதலை செய்யப்படுவார் என்று குறிப்பிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி உலக பாரம்பரியமாக கருதப்படும் சீகிரிய வளாகத்தில் கவி வரிகள் உள்ள பகுதியில் (மீற்றர் 62- 63 இடையே) இரு சொற் தொடர்களை கிறுக்கியதாக யுவதி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவ்வாறு கிறுக்கியதன் ஊடாக புராதன சின்னத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி 1993 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க தொல் பொருள் திருத்தச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் 15 (ஏ) அத்தியாயத்தின் கீழும் 2005 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அபராத தொகையை அதிகரிக்கும் சட்டத்தின் 2 ஆவது அத்தியாயத்தின் 3 ஆவது உப பிரிவின் கீழும் தண்டனைக்குரிய குற்றத்தினை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதன்படி குறித்த யுவதிக்கு தம்புள்ள நீதிவான் நீதிமன்றத்தில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.