கமலினி செல்வராஜன் காலமானார்

1560

Kamalini selvarajan

இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார். தமிழ் நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமானார்.

ரூபவாஹினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய ‘திருப்பங்கள்’, எஸ். ராம்தாசின் ‘எதிர்பாராதது’, எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய ‘சமூக சேவகி’ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கமலினி செல்வராஜன் ரூபவாஹினியிலும், ஐ.ரி.என். தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார்.

இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். கொள்ளுப்பிட்டி சென்.அந்தனீஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென்.கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். தந்தை மு.கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது சில்லையூர் செல்வராசனை திருமணம் புரிந்து கொண்டார்.

இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ‘ஆதர கதாவ” என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார் கமலினி செல்வராஜன்.