விஸ்டனின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக குமார் சங்கக்கார, அஞ்சலோ மத்யூஸ்!!

497

Sangakkara-and-Mathews

கிரிக்கெட்டின் பைபிள் என்று பெருமைப்படுத்தப்படும் இங்கிலாந்தின் விஸ்டன் சஞ்சிகை ஒவ்வொரு வருடமும் வெளியிடும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது இலங்கை அணியின் கிரிக்கெட் நட்சத்திரமும், உலகக்கிண்ணப் போட்டிகளுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தவருமான குமார் சங்கக்காரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சங்கக்காரவின் கடந்த வருட சிறப்பான பெறுபேறுகளுடன் உலகக்கிண்ணத்தில் அவர் பெற்ற 4 தொடர்ச்சியான சத சாதனைகளும் சங்காவுக்கு இந்த விருதை வழங்குவதில் விஸ்டன் பெருமை கொள்வதாக விஸ்டன் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒவ்வொரு ஆண்டையும் போல இவ்வாண்டும் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து கிரிக்கெட் வீரர்களில் கடந்த வருடத்தில் சிறப்பாகப் பிரகாசித்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே சிறப்பாக விளையாடியிருந்த இவ்விருவரும் பெருமைப்படுத்தப்பட்டுள்ள அதே வேளை, இங்கிலாந்தின் இளம் வீரர்களான கரி பலன்ஸ், மொயீன் அலி ஆகியோருடன், இங்கிலாந்தின் பிராந்தியப் போட்டிகளில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி இப்போது இங்கிலாந்து அணியிலும் இடம்பிடித்துள்ள அடம் லித் மற்றும் சிறப்பாகப் பந்துவீசிய நியூ சீலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் ஜீத்தன் பட்டேலும் பெயரிடப்பட்டுள்ளனர்.

முதல் தடவையாக இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள முன்னணி கிரிக்கெட் வீராங்கனை என்ற விருது அவுஸ்திரேலிய மகளிர் அணியின் தலைவி மெக் லன்னிங்குக்கு கிடைத்துள்ளது.