யேமன் நாட்டிலிருந்து 54 இலங்கையர்கள் அரசாங்கத்தினால் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 43 இலங்கையர்கள் சீன கப்பல் மூலம் 6ஆம் திகதி ஜிபோடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவும், இந்தியாவும் ஆறு இலங்கையர்களை மீட்டுள்ளனர். ஐந்து இலங்கையர்கள் ஓமான் எல்லைக்கு சென்று அங்கிருந்து இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைரோபியிலுள்ள இலங்கை தூதரகத்தினால் நடவடிக்கை செயலகம் ஒன்றும் ஜிபோடியில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஜிபோடியிலிருந்து 29 இலங்கையர் நேற்று இலங்கைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களை பிரதி வெளிவிவகார அமைச்சர் விமானநிலையத்தில் வரவேற்றார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி நிலையமும் வெளிவிவகார அமைச்சும் இந்த விடயம் தொடர்பில் இணைந்து செயற்பட்டு வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






