20ம் திகதி 19வது திருத்தம் சமர்பிக்கப்பட்ட பின் பாராளுமன்றம் கலைக்கப்படும் : ஜனாதிபதி!!

660

Maithri

19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின் பாராளுமன்றை கலைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அதன்பின் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் வகையில் பாராளுமன்றை கலைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (09.04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து தாம் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதாகவும் பாராளுமன்றில் தற்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தபடி அதனை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றை கலைத்த பின் நடைபெறும் பொதுத் தேர்தலில் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.