வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தாக்க முயற்சி!!

1131

1

தமக்கு காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போது அங்கு கடமையில் நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தம்மை தாக்க முற்பட்டதாக சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் வடமாகாண புனர்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையிலான குழுவினரிடம் முறையிட்டுள்ளனர்.

இன்று வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்திற்கு வடக்கு புனர்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்த போதே இதனைத் தெரிவித்தனர். இதன் போது மக்கள் அவர்களிடம் தெரிவித்ததாவது,

கடந்த 20 வருடத்திற்கு மேலாக சிதம்பரபுரம் நலன்புரிநிலையத்தில் வசிக்கும் நாம் எமக்கு காணி வழங்கக் கோரி புதன்கிழமை வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டோம். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட வேளையிலும் மாவட்ட அரச அதிபரை சந்தித்து உரையாட முற்பட்ட வேளையிலும் அதனைத் தடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் எம்மை மிரட்டும் வகையில் செயற்பட்டதுடன் எமக்கு அடிப்பதற்கும் கையையும் ஓங்கியிருந்தார்.

இது தவிர, அரச அதிபரிடம் எமது பிரச்சனைகள் தொடர்பாக தெரியப்படுத்திய போது தான் காணி வழங்க தயார் எனவும் மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் அரசாங்கம் அனுமதி வழங்கினால் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். எனவே இவை தொடர்பில் கவனம் செலுத்தி எமக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.