ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”ஈழத்தில் இனப்படுகொலை இடம்பெற்ற போதும், ஈழத்தமிழர்கள் மீது வன்முறைகள், தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்படும் போதும், அத்தகைய மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக தங்களது கண்டனத்தையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தி, இலங்கையில் தமிழர்கள் வாழவேண்டும் என்று தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காக தங்களது உடல்களையே தீயில் கருக்கிய ‘ஈகியர்கள்’ எமது தமிழகத்து உறவுகள்! ஒப்பற்ற உயிர்த்தியாகங்களை செய்துள்ள எமது உறவுகள், ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை ஆறாத வலியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படுகொலையை அனைத்து ஈழத்தவர்களும் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ் தொழிலாளர்களின் வறுமையை காரணம் காட்டி, அவர்களை ‘என்ன தொழிலுக்காக கூட்டிச்செல்கின்றோம்’ என்றுகூடக் கூறாமல் அழைத்துச்சென்று சட்டவிரோத தொழில்களில் ஈடுபட பணிக்கப்படுகின்றனர். இவ்வாறு அழைத்துச்செல்லப்படும் தமிழ் தொழிலாளர்கள், ‘தாங்கள் இன்ன தொழிலுக்காகதான் அழைத்து வரப்பட்டுள்ளோம்’ என்பதை உணர்ந்து சுதாகரித்துக்கொண்டதும், அவர்களை வெளியுலகத் தொடர்புகள் ஏதுமற்று அச்சுறுத்தி தடுத்து வைப்பதும், விசயமறிந்த தொழிலாளர்கள் எதிர்க்கேள்வி கேட்டால் அவர்களை தாக்குவதும், கொலை செய்வதும், ஆந்திர வனத்துறை – காவல்துறையினரிடம் சிக்க வைப்பதும் நடைமுறையில் உள்ளது. எந்தவகையில் நோக்கினும் இங்கு பாதிக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தமிழர்களே! சர்வதேச உழைப்பாளர்கள் தினம் (மே01) அண்மித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஆந்திர வனத்துறை மற்றும் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தப்படுகொலையானது கண்டனத்துக்குரியது. தெரிந்தே திட்டமிட்டு ஒரு இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலையாகவே, தாக்குதல் சம்பவமாகவே இதை நோக்க முடிகின்றது. சமுக விரோத செயல்களில் ஈடுபடுகின்ற சமுக விரோத முதலாளிகள் காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப்படுகையில், அதே முதலாளித்துவ வர்க்கத்தால் நிர்ப்பந்தத்துக்குள்ளாக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தை தண்டிப்பதை, வஞ்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டம் ஒழுங்கைப்பேண வேண்டிய ஆந்திர வனத்துறை – காவல்துறையினர் சட்டத்தை எழுந்தாமானமாக கையில் எடுத்துக்கொண்டு, உச்சக்கட்ட தண்டனை வழங்கியிருப்பதானது, மொத்த இந்திய நாட்டின் நீதிமன்ற செயல்முறைகளுக்கும் எதிரானது. மனித உரிமை சட்டங்களுக்கு முரணானது. மனித மாண்புகளுக்கு மதிப்பளிப்பவர்கள் எவரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சமுகவிரோத முதலாளிகள், தேசவளச்சுரண்டல் வியாபாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
தொழிலாளர் படுகொலைகள் தொடர்ந்தும் நடைபெறாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ‘தமிழன் உழைக்கப்பிறந்தவன், கடின உழைப்பைக்கண்டு அஞ்சாதவன்’ இதனை உணர்ந்துகொண்டுள்ளவர்கள், அவனுக்கு வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவன் வாழ்வதற்கு உரிமையுள்ளவன் என்பதை விளங்கி கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. தொழிலாளர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்களின் சார்பில் எமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, அவர்களின் உரிமைகள் மீது நாட்டம் கொண்ட ஜனநாயகவாதிகளும் மனிதஉரிமை அமைப்புகளும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்” எனக் கூறியுள்ளார்.
நன்றி :தினக்குரல்