இம்முறை புத்தாண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 43 பேர் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து பலியாகியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் நேற்று முன் தினம் 15 ஆம் திகதி வரையிலான ஐந்து நாட்கள் புத்தாண்டு காலப்பகுதியிலேயே இந்த இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 29 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வாறான கொலை மற்றும் விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.
இம்முறை புத்தாண்டு காலப்பகுதியான ஏப்ரல் 11 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் 13 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அது தொடர்பில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 28 விபத்துச் சம்பவங்கள் இந்த ஐந்து நாட்களுக்குள் பதிவாகியுள்ளதுடன் அதன் காரணமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடம் இதே ஐந்து நாட்கள் காலப்பகுதியில் 27 கொலைச் சம்பவங்களில் 27 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் 56 வாகன விபத்துக்கள் ஊடாக 63 பேர் உயிரிழந்திருந்தனர்.
ஊடகங்கள் வாயிலாக பொலிஸார் முன்னெடுத்த அறிவுறுத்தல், செயற்பாடுகள் காரணமாகவே இவ்வருடம் கொலைகள், விபத்துக்களை இந்தளவு தூரம் கட்டுப்படுத்த முடிந்ததாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இம்முறை தீவிபத்துக்கள் காரணமாக நான்கு பேரே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியதுடன் பொது மக்களை அறிவுறுத்தும் பணிக்கு பொலிஸாருக்கு உதவிய ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதேவேளை புத்தாண்டு காலப்பகுதியில் பொலிஸார் முன்னெடுத்துள்ள குடி போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில் நேற்று காலை 6.00 மணி வரை 1122 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 600 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர 404 முச்சக்கர வண்டிச் சாரதிகளும் 37 லொறி சாரதிகளும் அதில் உள்ளடங்குவதாக குறிப்பிட்டார்.






