இலங்கை அணியில் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகிய இருவரும் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புது கடினம் என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக விளங்கிய குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன, இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரோடு சர்வதேச ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்றனர்.
இந்நிலையில் இலங்கை அணியில் இவர்களின் இழப்பை ஈடுசெய்ய நீண்ட காலம் எடுக்கும் என்று இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ் கூறியுள்ளார்.
தற்போது ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் மத்தியூஸ், இது தொடர்பாக கூறுகையில், சங்கக்கார மற்றும் ஜயவர்தன ஓய்வு பெற்றதால் இலங்கை அணியில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி விட்டது.
அந்த வெற்றிடத்தை நிரப்ப சிறிது காலம் தேவைப்படும். அணித்தலைவராக இந்த நிலைமையை சமாளிப்பது சற்று கடினமானது. இருப்பினும் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர்.
அடுத்த உலகக்கிண்ணத்திற்கு இன்னும் 4 ஆண்டு கால அவகாசம் உள்ளது. அதற்குள் இலங்கை அணி நல்ல ஒரு நிலைமையை அடையும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.






