வரலாற்றில் உலகை உலுக்கிய சில நிலநடுக்கங்கள்!!

1039

NP

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல உயிர்கள் பலியாகியுள்ளதோடு, பெரும் சேதமும் ஏற்பட்டுள்ளது. தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது.

நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இவ்வாறான நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது.

3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.

உலகின் பல நாடுகளில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்ட சில நிலநடுக்கங்களின் பட்டியல் வருமாறு:

01) 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி ஈரானின் தாப்ரிஸ் நகரில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் 306 பேர் இறந்தனர். ரிக்டர் அளவுகோலில் முறையே 6.3, 6.4 புள்ளிகளாக இந்த நிலநடுக்கங்கள் பதிவானது.

02) 2011ம் ஆண்டு மார்ச் 11ம் திகதி ஜப்பானில் வடகிழக்கு கடலோரப் பகுதியில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி தாக்கி சுமார் 18,900 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா அணு உலைகளில் விபத்து ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ரிக்டர் அளவு கோலில் 9.0 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

03) 2010ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2.50 இலட்சம் முதல் 3 இலட்சம் பேர் வரை இறந்தனர். ரிக்டர் அளவு கோலில் இது 7.0 ஆக பதிவானது.

04) 2008ம் ஆண்டு மே 12ம் திகதி சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 87,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ரிக்டர் அளவு கோலில் இது 8.0 புள்ளியாக காணப்பட்டது.

05) 2006ம் ஆண்டு மே 27ம் திகதி இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா மாகாணத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர். 15 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

06) 2005ம் ஆண்டு அக்டோபர் 8ம் திகதி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். ரிக்டர் அளவு கோலில் இது 7.5 புள்ளிகளாக பதிவானது.

07) 2005ம் ஆண்டு மார்ச் 28ம் திகதி இந்தோனேசியாவின் நியாஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 900 பேர் இறந்தனர்.

08) 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி அலைகளை தோற்றுவித்தது. இதனால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் 2.20 இலட்சம் பேர் உயிரிழந்தனர்.

09) 2003ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஈரானின் பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 31,884 பேர் இறந்தனர். ரிக்டர் அளவு கோலில் இது 6.7 புள்ளிகளாக காணப்பட்டது.

10) 2001ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25,000 பேர் இறந்தனர். 1.6 இலட்சம் பேர் காயமடைந்தனர். 7.7 ரிச்டர் அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியது.

11) 1993ம் ஆண்டு செப்டம்பர் 30ம் திகதி மகாராஷ்டிர மாநிலத்தில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்தத்தில் 7,601 பேர் இறந்தனர்.

12) 1991ம் ஆண்டு அக்டோபர் 20ம் திகதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இமயமலை அடிவாரப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 768 பேர் உயிரிழந்தனர்.

13) 1988ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் திகதி நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் 6.8 புள்ளி ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 721 பேர் இறந்தனர். பிகார் மாநிலத்தில் 277 பேர் இறந்தனர்.

14) 1976ம் ஆண்டு ஜூலை 28ம் திகதி சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2.42 இலட்சம் பேர் இறந்தனர். ரிக்டர் அளவில் இது 7.8 புள்ளிகளாக பதிவானது.

15) 1934ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி நேபாளத்திலும், பிகாரிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 10,700 பேர் உயிரிழந்தனர். 8.1 ரிக்டர் புள்ளிகளாக இது பதிவானது.