புத்தரின் பிறப்பு, பரிநிர்வாணம் மற்றும் இறப்பை கொண்டாடும் முகமான வெசாக் தின கொண்டாட்டங்கள் நேற்று முதல் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படும் நிலையில் தலை நகர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மிக விமர்சையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கொழும்பில் மட்டும் வெசாக் அலங்காரப் பந்தல்கள் 9 நிறுவப்பட்டுள்ளதுடன் 15 வெசாக் வலயங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொழும்பில் 52 இருக்கும் மேற்பட்ட அன்னதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தலைநகரில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள வெசாக் அலங்காரப் பந்தல்கள் நேற்று இரவு உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டதுடன் மக்கள் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.
பிரதானமாக கொழும்பின் கிரண்ட்பாஸ், புறக்கோட்டை மெனிங் சந்தை அருகிலும், கங்காராமை விகாரையை அண்மித்த பகுதியிலும் வழமை போன்று வெசாக் அலங்காரப் பந்தல்கள் நிறுவப்பட்டுள்ளன.
கொழும்பு, கிரண்ட்பாஸ், பலாமரச் சந்தி பிரதேசத்தில் இம்முறை 47 ஆவது தடவையாகவும் வெசாக் அலங்கார பந்தல்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் புறக்கோட்டை மெனிங் சந்தைப் பகுதியில் 53 ஆவது தடவையாக அலங்கார பந்தல் நிறுவப்பட்டுள்ளன.
இந் நிலையில் குறித்த வெசாக் அலங்கார பந்தல்கள் மற்றும் வெசாக் வலயங்களைப் பார்வையிட ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றிரவு முதல் கொழும்பு நகரின் வெசாக் வலயங்களுக்கு சென்று வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி தலைநகரின் பாதுகாப்புக்கு மட்டும் 1500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிவில் மற்றும் சீருடையில் தமது கடமைகளை மேற்கொள்வர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன் ஏனைய நகரங்களிலும் வெசாக் வலயங்கள், வெசாக் அலங்கார பந்தல்களைப் பார்வையிட மக்கள் அலை மோதுவதால் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகள் ஊடாக வும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே வெசாக் தினத்தை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் பலராலும் வழங்கப்படும் அன்னதான நிகழ்வுகள் குறித்து பூரண அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் குறிப்பிட்டது.
நாடளாவிய ரீதியில் 6000 இற்கும் அதிகமான அன்னதான நிகழ்வுகள் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றின் தரம் குறித்து தொடர்ச்சியாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் 1800 சுகாதார பரிசோதகர்களைக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டது.
குறிப்பாக பான வகை தானங்களின் போது பயன்படுத்தப்பட்டுள்ள நிறக் கலவை தொடர்பில் அவதானம் தேவை என குறிப்பிடும் அந்த சங்கம் திடீர் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு அன்னதான நிகழ்வுகளின் தரம் உறுதிசெய்யப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளது.






