ராஜபக் ஷ குடும்பத்தினரின் ஊழல் அம்பலம் : பதுக்கிய சொத்துக்களின் பெறுமதி 18 பில்.டொலர் : மங்­கள சம­ர­வீர!!

755

Mahinda

வெளிநாட்டு உளவுப் பிரிவின் தக­வ­லுக்கு அமை­வாக வெளிநா­டு­களில் ராஜபக் ஷ குடும்பத்தினரால் பதுக்­கி­வைக்­கப்­பட்­டுள்ள சொத்­துக்களின் பெறு­மதி 18 பில்­லி­யன் அமெரிக்க டொலர்களாகும். மேலும் இலங்­கை நாணய மதிப்பீட்டின்படி 2.2 ட்றி­ல்லியன் ரூபாவாகும் என வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரிவித்தார்.

மேற்­கு­றிப்­பிட்ட தொகை­யா­னது ஊழியர்சேமலாப நிதி­யத்தின் சேமிப்­பி­லுள்ள தொகையின் பெறும­தியை விடவும் இருமடங்காகும். அத்­தோடு இலங்­கையின் மொத்த தேசிய உற்­பத்­தியின் நான்கில் ஒரு பகுதி­யாகும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ராஜபக் ஷ குடும்பத்தினரின் ஊழல் என்­பது பாரிய மோச­டி­யாகும். இதனை கண்­ட­றி­வ­தற்கு நான்கு நாடு­களின் உத­வியை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் ஊடாக உலகின் அவ­தா­னத்தை இலங்­கையின் மீது திசை திருப்ப எம்மால் முடிந்­தது. ஜன­வரி 8 ஆம் திகதி இலங்கை மக்­க­ளினால் அர­சியல் புரட்சியொன்று செய்­யப்­பட்­டது.

உலக நாடுகளின் பல விமர்­ச­னத்­திற்கு உள்­ளான சர்­வா­தி­கா­ர­மிக்க குடும்ப ஆட்­சியை இந்த தேர்தலின் ஊடாக எம்மால் தோற்­க­டிக்க முடிந்­தது. இந்த புரட்சி எந்­த­வொரு அர­சியல் கட்­சிக்கும் கிடைத்த வெற்­றி­யல்ல. மாறாக அர­சியல் செயற்­றிறன்­மிக்க திட்­ட­மி­ட­லுக்கு கிடைக்­கப்­பெற்ற வெற்­றி­யாகும்.

உலகில் தியு­னி­சியா,எகிப்து ஆகிய நாடு­களில் சர்­வா­தி­கார கொடுங்கோல் ஆட்­சி­யா­ளர்­களை ஆட்சி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு அரபு வசந்தம் என்ற பெயரில் மக்கள் வீதியில் இறங்கி உயி­ரையும் தியாகம் செய்து போரா­டினர். இந்த போராட்­டங்­க­ளுக்கு துப்­பாக்கி, கற்கள் உள்­ளிட்ட ஆயு­தங்­களை பிர­யோகித்­தனர். எனினும் இலங்­கையின் சர்­வா­தி­கார போக்­குடன் கூடிய கடந்த ஆட்­சியை நீக்குவதற்கு இவ்­வா­றான போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக மக்­களின் வாக்கினை கொண்டே இந்த வெற்­றியை நாம் பெற்­றுக்­கொண்டோம்.

இதனை வெளிநா­டு­களில் பாரிய அர­சியல் புரட்சி என்றே போற்­று­கின்­றனர். இந்த புரட்சி ஜன­நா­யக முறையில் பெற்­றுக்­கொண்ட வெற்­றி­யாகும். இலங்­கையின் அர­சியல் புரட்சி தொடர்பில் உலக நாடு­க­ளி­லுள்ள எழுத்­தா­ளர்கள் நூல்கள் பல எழுத ஆரம்பித்துள்ளனர். உலக நாடு­களில் இடம்பெற்றதன் பிர­காரம் புரட்­சிக்கு பின்பு புரட்சி ஏற்­ப­டு­வது வழக்­கமா­கி­யுள்­ளது. இதன்­படி இலங்கை­யிலும் அர­சியல் புரட்­சிக்கு பின்பு மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அவ­தார புரட்சி தோன்றியுள்ளது.

இந்த பின்­ன­ணியில் ராஜ­பக்ஷ ஆட்­சியை இல்­லாமல் செய்த போதிலும் மீண்டும் அதன் அவ­தாரம் உரு­வெ­டுக்க தொடங்­கி­யுள்­ளது. மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட அரா­ஜக ஆட்­சி­யா­ளர்­களை மீளவும் அர­சி­ய­லுக்கு கொண்டு வர சிலர் முயற்­சிக்­கின்­றனர்.

கடந்த ஆட்சியாளர்களினால் நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­யி­டப்­பட்ட பணத்தின் பெறு­மதி எல்­லை­யில்­லா­தது. இதனை கணக்­கி­டு­தற்கு கூட அதி­க­ளவில் காலம் தேவை.
உலகில் சர்­வ­தி­கார போக்­குடன் ஆட்சி நடத்­திய பலர் வெளிநா­டு­களில் பணங்­களை பதுக்கி வைத்துள்­ளனர்.

இவர்­க­ளினால் பதுக்கி வைக்­கப்­பட்ட பணத்­தொ­கையில் ஒரு மடங்கு மாத்­தி­ரமே தற்­போது வெ ளிநாட்­டு­உ­ளவு பிரி­வினால் கண்­டுப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய லிபி­யாவில் சர்­வ­தி­கார ஆட்சிப்­பு­ரிந்த மொஹமட் கடா­பியின் வெளிநாடுகளில் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள சொத்­துக்­களின் பெறு­மதி அமெ­ரிக்க டொலர் 80 பில்­லியன் ஆகும்.

எனினும் அவர் இறந்து பல வரு­டங்­க­ளா­கியும் வெ ளிநாடுகளில் அவ­ரினால் பதுக்கி வைக்­கப்­பட்ட சொத்தில் 3.6 பில்­லியன் டொலர் சொத்­துக்­களே இது­வரை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. அதே­போன்று எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபா­ரக்கின் வெளிநாடுகளில் பதுக்கி வைக்­கப்­பட்ட சொத்­துக்­களின் பெறு­மதி 70 பில்­லி­யன் டொலராகும்.

எனினும் அவர் ஆட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு ஐந்து வரு­ட­ங்களா­கி­யுள்ள நிலையில் இவ­ரது சொத்து­களில் 800 மில்­லியன் டொலர் மட்டுமே இது­வ­ரைக்கும் கண்­டுப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.
இந்­நி­லையில் எமது நாட்டின் முன்னைய ஆட்­சிக்­கா­லத்தின் போது மக்­களின் பணம் பாரி­ய­ளவில் மோசடி செய்­யப்­பட்­டது.

இதன்­படி வெளிநாட்டு உள­வுப்­பி­ரி­வினர் மற்றும் சர்­வ­தேச அமைப்­புகள் எமக்கு வழங்­கிய தகவலின் அடிப்­ப­டையில் வெ ளிநா­டு­களில் பதுக்­கி­வைக்­கப்­பட்­டுள்ள முன்னைய ஆட்சியாளர்களி்ன சொத்­துக்­களின் பெறு­ம­தி­யா­னது 18 பில்­லியன் அமெரிக்க டொலர்களாகும்.

மேலும் இலங்­கையின் மதிப்­பீட்­டின்­படி அதன் பெறு­மதி 2.2 திரி­லியன் ரூபா­வாகும். எனினும் இதன் உண்­மைத்­தன்­மையை நாம் பரி­சீ­லனைசெய்து பாரக்க வேண்டும். மேற்­கு­றிப்­பிட்ட தொகை­யா­னது ஊழியர் சேம­லாப நிதி­யத்தின் சேமிப்­பி­லுள்ள தொகையை விடவும் இரு மடங்­காகும். எமது நாட்டின் ஊழியர் சேம­லாப நிதி­யத்தில் தற்­போது வரைக்கும் 1.4 திரிலியன் ரூபாவே சேமிப்பில் உள்ளது. அத்தோடு இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் நான்கில் ஒரு பகுதியாகும். இவை சாதாரண மோசடி அல்ல. அப்பாவி மக்கின் பணமாகும்.

இது தொடர்பில் விசாரணை செய்வதற்கான வசதி இலங்கையில் இல்லை. ஊழல் மோசடிகளை கண்டறிவதற்கு நான்கு நாடுகளில் உதவியை நாம் கோரியுள்ளோம். மேற்படி குறித்த நாடுகள் விசாரணைக்கான தொழில்நுட்ப உதவிகளை எமக்கு வழங்க தயாராக உள்ளது.

-வீரகேசரி-