பாணந்துறை ஹிரண பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலைய உரிமையாளரான 45 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். குறித்த பெண்ணை கொலை செய்தவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரை தேடி விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த வர்த்தகப் பெண் நேற்றிரவு வர்த்தக நிலையத்திலிருந்து வீடு திரும்பாததால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்தே சடலமானது நேற்று அவரது வர்த்தக நிலையத்துக்குள் இருந்து மீட்கப்பட்டது. உடலின் பல்வேறு இடங்களிலும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டன.
இதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு பொலிஸ் மோப்ப நாயான கிரேரோவை கொண்டுவந்து தடயங்களை சேகரித்தனர். அதன்படி அந்த மோப்பநாயானது அக்கடையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள மருந்தகத்துக்கு அருகில் போய் நின்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட போது கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கும் அந்த மருந்தகத்தின் உரிமையாளருக்கும் இடையே இரகசிய தொடர்பு இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இந் நிலையில் குறித்த நபரை பொலிஸார் தேடிய போதும் அவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருப்பது தெரியவரவே சந்தேகத்தின் அடிப்படையில் அவரை தேடி சிறப்பு பொலிஸ் குழு விசாரணைகளை தொடர்கின்றது.






