
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கபோவதாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையொன்று முன்னெடுத்துவருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியது. இதுதொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது,
புதிய அரசின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி எரிபொருட்களின் விலைகள் குறைத்ததையடுத்து தொடர்ச்சியாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதனாலும் எரிபொருட்களுக்கான கேள்வி அதிகரிப்பதற்கு சாத்தியகூறுகள் இருப்பதனாலும் அவற்றின் விலைகள் அதிகரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது. எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுபாடும் இல்லை.
எதிர்காலத்திலும் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. இதேவேளை எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை.
புதிய அரசினால் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. பெற்றோலிய கூட்டுதாபனத்தில் ஐந்துநாட்களுக்கு போதுமான 10 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருட்களே கையிருப்பில் உள்ளதாகவும் ஐந்துநாட்களின் பின்னர் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதோடு, நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் மெற்றிக்தொன் எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்ற அதேவேளை தற்போது 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கையிருப்பில் உள்ளது. மேலதிகமாக எரிபொருள் கொள்வனவிற்கு போதிய அளவு நிதி வசதிகள் இல்லை.





