மேகி நூடுல்ஸ் விவகாரம் : சிக்கலில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள்!!

560

Maggie

பிரபல நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில், அதிகமான ரசாயனம் கலந்து இருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த மாநிலத்தில் பரபங்கி என்ற இடத்தில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மேகி நூடுல்சை பரிசோதனை செய்த போது தான் இது தெரிய வந்தது.

இதனையடுத்து உத்தரபிரதேசத்தில் லக்னோ, கன்னாஜ், மீரட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி மேகி நூடுல்சை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த மாநில அரசு அந்த நூடுல்சுக்கு தடைவிதித்துள்ளது.

மேலும், அந்த நூடுல்ஸ் விளம்பரங்களில் நடித்ததற்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர் மீது பரபங்கி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார கூடுதல் செயலாளர் ஜி.குருசரண் கூறுகையில், “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம், அனைத்து மாநிலங்களில் இருந்தும் அந்த நூடுல்சின் மாதிரிகளை ஆய்வுக்கு சேகரித்து இருக்கிறது.

முழுமையான பரிசோதனை முடிவுகள் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் கிடைக்கும். அதில் விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

மேலும், மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்த நடிகர்- நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக இருந்தால் அவர்கள் அதற்கு முழுப் பொறுப்பு ஆவார்கள் என்று கூறியுள்ளார்.