
இங்கிலாந்தில் வொர்செஸ்டர்ஷைர் -– நார்தாம்ப்டன்ஷைர் அணிகளுக்கு இடையே நடந்த இருபது ஓவர் போட்டியில் ஒரு அதிசயம் நடந்தது.
முதலில் ஆடிய வொர்செஸ்டர்ஷைர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைக் குவித்தது. இந்த இமாலய இலக்கை மிக வேகமாகத் துரத்த ஆரம்பித்தது நார்தாம்ப்டன்ஷைர். 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் குவித்து வெற்றிக்கு அருகில் சென்றபோது வொர்செஸ்டர்ஷைர் அணி தலைவர் டேரில் மிட்செல் புதிய உத்தியைக் கையாண்டார்.
மொயின் அலி வீசிய 16ஆவது ஓவரின்போது விக்கெட் காப்பாளர் பென் காக்ஸின் கால்காப்பு, கையுறைகளைக் கழற்றச் சொன்னார். அவரை ப்ளை ஸ்லிப்பில் நிற்கச் சொன்னார்.
இதனால் துடுப்பாட்டவீரரின், ஸ்டம்புகளுக்குப் பின்னால் யாரும் நிற்காத சூழல் ஏற்பட்டது. எப்படியும் எல்லாப் பந்துகளையும் சிக்ஸரும் பவுண்டரியுமாக விரட்டுவதால் எதற்காக விக்கெட் காப்பாளர் வீணாக ஸ்டம்புகளின் பின்னால் நிற்கவேண்டும் என்று தலைவர் எண்ணினார்.
விக்கெட் காப்பாளர், ப்ளை ஸ்லிப் பகுதியில் நிற்பதைக் கண்ட நடுவர்கள் நிக் குக் மற்றும் கிரகாம் லோயிட் ஆகிய இருவரும் விதிமுறைப்படி இது சரியா என நீண்டநேரம் விவாதித்தார்கள். பிறகு விதிமுறைப்படி சரியானதுதான் என முடிவெடுத்து ஆட்டத்தைத் தொடரச் செய்தார்கள்.
இதனால் அந்த ஓவரில் அதிக ஓட்டங்கள் எடுக்கமுடியாமல் போனது. ஒரே ஒரு ஓட்டம் மட்டும் விக்கெட் காப்பாளர் இல்லாததால் பை ரன் ஆனது. 16ஆ-வது ஓவரில் ஆரம்பித்து 18-ஆவது ஓவர் வரை விக்கெட் காப்பாளர், ப்ளை ஸ்லிப் பகுதியில்தான் நின்றுகொண்டிருந்தார்.
இறுதியில் நார்தாம்ப்டன்ஷைர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.





