இன்று மதியம் 1.30 மணியளவில் வவுனியா நகர மத்தியில் மார்ச் 12 பிரகடனத்திற்கான கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. மார்ச் 12 பிரகடனத்தில் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்புமனு வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அளவுகோள்கள் 2015 மார்ச் மாதம் 12ம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்டது.
அரசியல்வாதிகளுக்கு வேட்புமனு வழங்கும் போது கவனத்தில் கொள்வதற்கு அரசியல் கட்சிகள் இணங்கிய பொதுவான அளவுகோல்கள் வருமாறு..
1. குற்றவியல் சார்ந்த தவறொன்றுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அல்லது இடைநிறுத்திய சிறைத் தண்டணைக்கு உள்ளாக்கப்படாத ஒருவராக இருத்தல் வேண்டும்.
2. இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பில் குற்றவாளியாக்கப்படாத, சமூக அங்கீகாரம்பெற்ற நன்னடத்தையுள்ள ஒருவராக இருத்தல் வேண்டும். அதே போல் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களுக்கு உள்ளானவர்கள் பற்றி விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
3. மதுசாரம், போதைவஸ்து, சூதாட்டம், கசினோ, விலைமாதர் விடுதி போன்ற பணஈட்டல்கள் உட்பட நாட்டின் நல்லிருப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவராக அல்லது ஈடுபட்டுவரும் ஒருவராக இராதிருத்தல் வேண்டும்.
4. இயற்கை உயிர்மூலக் கூட்டமைப்பைச் சிதைத்து விடக்கூடிய சுற்றாடல் ரீதியாக தீங்கு பயக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவராக அல்லது ஈடுபடுபவரும் ஒருவராக இராதிருத்தல் வேண்டும்.
5. அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாத ஒருவராக இருத்தல் வேண்டும்.
6. மக்கள் பிரதிநிதி ஒருவராவதற்கு முன் நாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய நிதிசார் ஒப்பந்தங்களில் ஈடுபட்ட ஒருவராக அதேபோல் மக்கள் பிரதிநிதி ஒருவராக இருத்து கொண்டு தமது அரசியல் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அரசாங்கத்துடன் நிதிசார் ஒப்பந்தங்களில் ஈடுபட்ட ஒருவராக அல்லது அத்தகைய ஒப்பந்தமொன்றின் தரப்பினர் ஒருவராக இராதிருத்தல் வேண்டும்.
7. வேட்புமனு கையளிக்கின்ற வேட்பாளர் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தின் குடியிருப்பாளர் ஒருவராக அல்லது அம் மக்களுடன் தொடர்புகளைக் கொண்ட ஒருவராக இருத்தல் வேண்டும்.
-பிராந்திய செய்தியாளர்-






