தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது விடுதலைப் புலிகளே : சிவநாதன் கிஷோர்!!(காணொளி)

598

OLYMPUS DIGITAL CAMERA

நேற்று(14.07.2045) வவுனியா அருந்ததி மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவநாதன் கிஷோர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்..

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுகின்றேன். ஆகையால் கடந்த காலங்களில் நான் செய்த சேவைகளை மக்கள் நன்கு அறிவார்கள், நான் கூறத்தேவையில்லை.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் காணிகளை அபகரித்தார். அங்கு முஸ்லிம் மக்களைக் குடியமர்த்தினார். இந்திய வீட்டுத்திட்டம் அனைத்தையும் முஸ்லிம் மக்களுக்கே வழங்கினார். தமிழ் மக்களுக்கு அவரால் எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலருக்கு சிங்களம் மற்றும் ஆங்கில அறிவு அறவே கிடையாது. அத்துடன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மட்டுமே அன்றி மக்களின் பிரச்சனையினை பாராளுமன்றத்திற்கு முன்வைப்பது கிடையாது.

விடுதலைப்புலிகள் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒவ்வொரு வேலைகளுக்காகவும் பயன்படுத்திக் கொண்டதுடன் தமது தேவைகளுக்கேற்றவாறு பயன்படுத்தினர்.

சில பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி பரப்புரைகளை மேற்கொண்டதுடன், சில பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளூரில் வைத்து பயன்படுத்தியும், என்னை அரசாங்கத்துடன் இருக்கும் அமைச்சர்களுடன் கதைத்து தங்களது தேவைகளை செய்வதற்கு பயன்படுத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசியத்திலிருந்து நான் விலகவில்லை. அதில் எவ்வித மாற்றுக்கருத்திற்கும் இடம் இல்லை. சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு எதிராக காட்டிக்கொடுப்பு வேலைகளில் ஈடுபட்டதுடன் இலங்கை, இந்திய இராணுவத்தினருடன் இணைந்து போராட்டத்தில் மக்களை விடுதலைப் புலிகள் எனக் காட்டிக் கொடுத்ததுடன் கப்பமும் வாங்கினார்கள். மக்களைக் கொன்று வீதியில் வீசினார்கள்.

கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் உடனடியாக நடாத்தப்பட்ட 2010 ஆண்டுத் தேர்தலில் எங்களுக்கு வேட்புமனுத் தருவதாக கூறி வேட்புமனுத்தராமல் இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளில் உள்ளவர்களுக்கு வேட்புமனு இல்லை என்று கூறியதற்கிணங்க எனது பாதுகாப்பு முக்கியம் கருதி நான் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தடன் கேட்கவேண்டி ஒருகட்டம் இருந்தது.

அல்லது போனால் மக்களுக்குத் தெரியும் இரண்டு தடவைகள் எனது வீட்டிற்கு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், என்னையும் எத்தனையோ தடவைகள் பாராளுமன்றம் சென்றுவிட்டு வரும்வழியில் வேவு பார்த்து எனக்கு கிளைமோர் தாக்குதல் செய்ய முற்பட்டனர்.

மக்களுடன் இருக்கவேண்டும் என்பதற்காக வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றேன்.

ஆனந்தசங்கரி ஐயா என்னுடன் தொடர்பு கொண்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியினரும் தொடர்பு கொண்டு கேட்டிருந்தபோது, என்னை தமிழ் வேட்பாளராக போட்டியிட சம்மதிக்கும் பட்சத்தில் போட்டியிடத் தயாராக இருப்பதாக தெரிவித்தேன்.

ஆனந்தசங்கரி ஐயா வேட்புமனுத்தந்து வன்னி மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுமாறு கூறியதையடுத்து நான் சம்மதம் தெரிவித்தேன்.

2001ஆண்டு விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர். அதில் நான்கு கட்சிகள் இருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியவே அவை.

ஆனந்தசங்கரி ஐயாவை விடுதலைப்புலிகள் இரண்டு தடவைகள் வன்னிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் வெளிநாடு சென்றுவிட்டார். 2004ஆம் ஆண்டு தேர்தல் வந்ததன் பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பை தேர்தலில் இறங்குமாறு பணித்தனர்.

அதற்குப் பின்னர்தான் தமிழரசுக்கட்சி மக்களிடம் பிரசித்தி பெற்றது.
மக்களுக்கு அறிமுகம் அல்லாத வேட்பாளர்களை தெரிவுசெய்து தாங்கள் அரசியலில் மீண்டும் மீண்டும் தொங்கிக் கொள்வதற்கு முயற்சி செய்தவர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்.

ஆனந்தசங்கரி ஐயாவை மாகாணசபையில் உள்வாங்கி அவரைத் திட்டமிட்டு கிளிநொச்சியில் தோற்கடித்தனர். அவரிற்கு போனஸ் ஆசனம் கூட வழங்காமல் அவரை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டு மேற்கொண்ட சதி.

கடந்த 60 வருடகாலமாக தமிழ் மக்களை வைத்து அரசியல் இலாபம் தேடி வந்துள்ளனர் தமிழ் தேசிய கூட்டப்பினர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் குண்டு துழைக்காத பெறுமதியான சொகுசு வாகனம் உட்பட வீடும் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தது யாவரும் அறிந்ததே.

கூட்டமைப்பினரால்தான் இளைஞர்கள் 1977ஆண்டு ஆயுதம் ஏந்தப் புறப்பட்டார்கள். தற்போது கூட்டமைப்பினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் கடந்தகால யுத்தத்தில் தனது இரண்டு விரல்களை இழந்த முன்னாள் போராளி ஒருவரையும் உள்வாங்கியுள்ளேன். இந்தத் தேர்தலில் ஒரு ஆசனத்தினைப் பெறுவதே எமது நோக்கமாகும். என ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

-பிராந்திய செய்தியாளர்-