
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாகுபலி திரைப்படம், தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் புகார் கூறி, மதுரையில் புரட்சிப்புலிகள் அமைப்பு மற்றும் ஆதித் தமிழர் கட்சியினர் சில தினங்களுக்கு முன்பு, படம் வெளியான திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை பொலிசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் மதுரை அருகில் பாகுபலி படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் இன்று காலை, 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் திரையரங்கின் சுவர் சிறிய அளவில் சேதம் அடைந்தது. நல்லவேளையாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பாகுபலி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. பொலிசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல்குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய 5 கும்பலை தேடி வருகிறார்கள்.





