40 இந்திய மீனவர்கள் விடுதலை!!

477

indian-fishermen-sri-lanka

இந்திய மீனவர்கள் 40 பேர் நேற்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களும் மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மேலும் 14 இந்திய மீனவர்களுமே நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் இராமநாதபுரம், நாகை மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த 26 இந்திய மீனவர்களும், கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த இந்திய மீனவர்களை நேற்று நான்காவது முறையாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவேளை, சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய பருத்தித்துறை நீதிவான் கணேசராஜா குறித்த மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள், இன்று கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.