துபாயில் கற்பழிக்கப்பட்ட நோர்வேபெண்ணிற்கு பொது இடத்தில் பாலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் டெபோரா டலேல்வ் என்ற 24 வயது பெண். கட்டிட உள் அலங்கார நிபுணரான இவர் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தபோது கற்பழிக்கப்பட்டார். தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து துபாய் போலீசில் புகார் செய்தார் டெபோரா.
புகார் அளிக்கச் சென்ற டெபோராவின் கடவுச்சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தடாலடியாக வர் மீதே வழக்கை திசை திருப்பினர். அதில் டெபோரா மது அருந்திவிட்டு வெளி நபரிடம் பாலுறவில் ஈடுபட்டதாகவும் உண்மையைத் திரித்துக் கூறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் டெபோராவிற்கு 16 மாத சிறைத்தண்டனையும் அவரை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 13 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
துபாய் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் நோர்வேயில் உள்ள மனித உரிமைக் குழுவினர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் கோபத்தில் உள்ளன. பாதிக்கப்பட்ட தனக்கு சிறைத்தண்டனை விதித்ததால் அதிர்ச்சியடைந்த டெபோரா மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.