எகிப்திய கெய்ரோ நகரிலிருந்து கடத்தப்பட்ட குரோஷிய பணயக்கைதியொருவரை தாம் தலையைத் துண்டித்து படுகொலை செய்துள்ளதாக அந்நாட்டிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குழுவினர் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேற்படி குரோஷிய பணயக்கைதியான தொமிஸ்லாவ் சலோபெக்கின் (30 வயது) சடலத்தைக் காண்பிக்கும் புகைப்படமொன்றையும் எகிப்திய சினாய் பிராந்தியத்திலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் குரோஷிய பிரதமர் ஸொரான் மிலனோவிக் தெரிக்கையில், தீவிரவாதிகளால் தொமிஸ்லாவ் படுகொலை செய்யப்பட்டதை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக கூறினார்.
தொமிஸ்லாவ் கடந்த ஜூலை மாதம் தலைநகர் கெய்ரோவிலிருந்து கடத்தப்பட்ட பின்னர் மேற்படி தீவிரவாதிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரைக் கொன்றுள்ளதாக உரிமை கோரியுள்ள அந்தக் குழுவினர், அவரது முதுகில் அவரது துண்டிக்கப்பட்ட தலை வைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளனர்.





