இன்று 14.08.2015 காலை வவுனியா நகரசபை ஊழியர்கள் தமது அடிப்படை உரிமைகள் தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இவர்களது போராட்டத்திற்கு வருக தந்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்றுக் கொள்வதாகவும் தற்பொழுது தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கு ஒத்துழைப்பினை வழங்குமாறும் ஓரிரு வாரங்களில் ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் கூறியதைத் தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டத்திலீடுபட்டவர்கள் கலைந்து சென்றதுடன் தமது ஊடக அறிக்கையினையும் வெளியிட்டனர்.
அதில் தெரிவிக்கப்பட்டதாவது..
வவுனியா நகரசபையில் நிரந்தர நியமனம் பெற்று கடந்த 30-35 வருடங்களுக்க மேலாக கடமையாற்றி வரும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு இதுவரைகாலமும் தரம் உயர்த்தல் வழங்கப்படவில்லை.
கடந்த 2013 சம்பள மீளாய்வுடன் 2015 ஆம் ஆண்டு தரம் உயர்வும். மீளாய்வும் சம்பள மீளாய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இம் மீளாய்வில் 2015 இரண்டாம் மாதம் தொடக்கம் சீர் செய்யப்பட்டு அதில் பலரது அடிப்படைச் சம்பளமானது ரூபா இரண்டாயிரம் வரை குறைப்பு செய்து மீளாய்வு செய்யப்பட்டது.
இது தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் மீள்பரிசீலனை மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்தும் குறைக்கப்பட்ட சம்பளமே வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தரால் ஆறாம் மாதம் தொடக்கம் சம்பள மீளாய்வு மீள் பரீசீலனை செய்யப்பட்டு சீர் செய்யப்பட்டு ஏழாம் மாத சம்பளத்தில் சீர் செய்யப்பட்ட கொடுப்பனவைவும் நிலுவையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆயினும் அந்நிலுவையோ சீர்செய்யப்பட்ட சம்பளமோ வழங்கப்படவில்லை. கடந்த ஆறு மாதமாக எமது நிர்வாகம் இது தொடர்பில் எமது தலைமை அலுவலகங்களிலும் இது தொடர்பிலான ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டதாக தெரியவில்லை.
எனவே எமது உரிமைக்காக கடந்த ஆறு மாதமாக காத்திருந்தும் எமக்கு சரியான தீர்வு கிட்டாமையால் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொள்வதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வவுனியா மாவட்ட மேலதிக இணைப்பாளர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பிராந்திய செய்தியாளர்-






