இந்தியாவின் 69 ஆவது சுதந்திரதின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் பிரதமர் மோடி கொடி ஏற்றி வைத்தார். இதையொட்டி டில்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியேற்றி வைத்துள்ளார். டில்லியில், ஒவ்வொரு 40 மீற்றருக்கும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பாதுகாப்பு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பா.ஜ.க. அலுவலகங்களை ஐ.எஸ். அமைப்பினர் குறிவைத்து தாக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக, இந்தியா முழுவதும் பொலிஸார் உசார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். டில்லி பொலிஸார், துணை இராணுவ படையினர், உளவுத்துறையினர் என பல்வேறு பாதுகாப்பு படையினரும் ஒருங்கிணைந்து, 7 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கான கொமாண்டோ படை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆள் இல்லா விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர் மூலமாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரதின விழா நடைபெறும் இடத்தில் சுமார் 1,400 கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.





