பாகிஸ்தானிய பஞ்சாப் மாகாண அமைச்சரின் அரசியல் அலுவலகம் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மாகாண அமைச்சர் உட்பட குறைந்தது 10 பேர் பலியானதுடன் 25 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்ற வேளை அந்த அலுவலகக் கட்டடத்தில் மாகாண உள்துறை அமைச்சரான சுஜா கன்ஸடா கூட்டமொன்றில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோக் பிராந்தியத்தில் ஷாடி கான் கிராமத்தில் இடம்பெற்ற மேற்படி தாக்குதலால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் கீழ் உள்துறை அமைச்சரும் ஏனைய பலரும் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இடிபாடுகளின் கீழிருந்து இதுவரை சுஜா கன்ஸடாவின் சடலம் உட்பட 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ராவல்பிண்டி ஆணையாளர் சயீத் தெரிவித்தார்.மீட்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை உரிமை கோரவில்லை என்ற போதும் பிரிவினைவாதிகளே காரணம் என நம்பப்படுகிறது.





