
ஏற்கனவே திட்டமிட்டபடி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார மேற்கொண்டுள்ளார்.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 2907 பரீட்சை நிலையங்களில் மொத்தம் 03 இலட்சத்து 40 ஆயிரத்தி 926 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இவர்களில் 02 இலட்சத்து 54 ஆயிரத்து 373 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 86 ஆயிரத்து 553 மாணவர்கள் தமிழ் மொழிமூலமும் தோற்றுவர்.
இதேவேளை, கடந்த 04ஆம் திகதி ஆரம்பமாகி 17ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தோ்தலுக்காக கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. 14 முதல் 23ஆம் திகதி வரையான காலப் பகுதியில் உயர்தரப்பரீட்சை நடைபெறவில்லை. இதுகுறித்து முன்கூட்டியே பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை செப்டெம்பர் 08ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இருகட்டங்களாக நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இதன்பிரகாரம், கடந்த 04ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரையும், 24 முதல் செப்ெடம்பர் 08 வரையான காலப்பகுதியில் நேரசூசி தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 03 இலட்சத்து 09 ஆயிரத்து 69 பேர் தோற்றி வருகின்றனர். இவர்களில் 02 இலட்சத்து 36 ஆயிரத்து 72 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், 72 ஆயிரத்து 997 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர். இவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 2180 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றிவருகின்றனர்.
அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, திருக்கோவில் கல்வி வலயங்களை உள்ளடக்கிய கல்முனை கல்வி மாவட்டத்தில் 23ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். கல்முனை கல்வி மாவட்டத்தில் 49 நிலையங்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறுவதுடன், 71 நிலையங்களில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





