
யாழில் இருவேறு இடங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர்.
குறித்த இரு சடலங்களில் ஒன்று வயோதிபப் பெண்ணினுடையதும் மற்றையது குடும்பஸ்தர் ஒருவருடையதுமென இனங்காணப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஆடியபாதம் பகுதியைச் சேர்ந்த சிவமுத்து கைலாசம் (75) என்ற வயோதிபப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மீட்கப்பட்ட மற்றுமொரு சடலம் கொட்டடி 8ஆம் ஒழுங்கை முத்தம்மன் வீதியைச் சேர்ந்த பூராசா கஜேந்திரன் (38) மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இரு சடலங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வயோதிபப் பெண் வீட்டில் தனிமையில் இருந்ததாகவும் இவரது பிள்ளைகளில் ஒருவர் ஆனைக்கோட்டையிலும் மற்றைய இருவர் வெளிநாடுகளில் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக ஆனைக்கோட்டையில் வசிக்கும் அவரது மகள் தெரிவிக்கையில்,
எமது தாயார் தனிமையிலேயே குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுக்காலை எனது கணவர் அவருக்கு உணவு கொண்டு செல்லும் போதே இச் சம்பவத்தை அவர் அறிந்திருந்தார்.
எனது தாயாருக்கு மனநோய் இருக்கிறது . இவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனவே அவரே தனக்குத் தானே எரித்து தற்கொலை செய்திருக்கலாம். ஏனெனில் இதுபோன்றே இந்த மாதம் முதலாம் திகதியும் 25 நித்திரை மாத்திரைகளை உண்டிருந்தார் என்றார்.
குறித்த வயோதிபப் பென்ணின் சடலம் வீட்டினுள் பூட்டிய நிலையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதால் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் இச் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே கூறமுடியும் என கோப்பாய் பொலி ஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் மதுபோதையினால் வீதியுள்ள வாய்க்காலுக்கு வீழ்ந்தமையினால் மரணம் சம்பவித்திருக்கலாம் என யாழ். பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இரு சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேல திக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





