ஜி சாட்-6 செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்துகின்றது இந்தியா!!

494

CM1ESaTUEAAfTan (1)தகவல் தொழில்நுட்பத்துக்கு உதவும் ஜி சாட் -6 செயற்கைகோள், ஜி.எஸ்.எல்.வி- டி6 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

அமெரிக்கா உட்பட உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆய்வு தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

பிஎஸ்எல்வி, ஜிஎஸ் எல்வி ரக ராக்கெட்டுகள் மூலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை சரியாக 4.52 மணிக்கு இந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான 29 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை 11.52க்கு தொடங்கியது.

செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் அனைத்தும் திட்டமிட்டப்படி சென்று கொண்டிருப்பதாகவும், நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ விண்ணில் ஏவும் 25 ஆவது தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் இது என்றும், GSLV ராக்கெட்டைப் பொறுத்தவரை 9 ஆவது முறையாக பயன்படுத்தப்படும் ராக்கெட் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட உள்ள இந்த செயற்கைகோள், 2 ஆயிரத்து 117 கிலோகிராம் எடைகொண்டது என்றும், இதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே அதிக எடை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.