வவுனியா ஓமந்தை ஏ9 வீதிச் சோதனை நடவடிக்கைகள் இன்று 29.08.2015 முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
1997 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் பிரதான வீதிவழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் ஓமந்தையின் பிரதான வீதி ஊடான பாதை மறிக்கப்பட்டு வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மாற்று வழியூடாக இதுவரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை பொருட்களுடன் வரும் வாகனங்கள் அவற்றை சோதனைக்குட்படுத்தும் இடமாகவும் ஓமந்தை சோதனைச் சாவடி செயற்பட்டது.
இதன் பிரகாரம், இன்று முதல் வழமைபோன்று ஏ-9 வீதியூடாக வடபகுதி நோக்கி மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் பயணம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரும் தமக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
-பிராந்திய செய்தியாளர்-






