வில்பத்து பாதுகாப்பு வனாந்தரத்தில் உலாவும் மான்களை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கொண்டுச் செல்ல ஆயத்தமான வேளையில் வனவிலங்கு அதிகாரிகளினால் இறைச்சியுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலவன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் மேலும் நால்வர் இணைந்து வில்பத்து பாதுகாப்பு வனாந்தரத்தினுள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து இரு மான்களை வேட்டையாடி அவற்றை அறுத்து இறைச்சியாக்கியுள்ளதாகவும், இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நான்கு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் ஒருவரை இறைச்சியுடன் கைது செய்ததாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஐம்பது கிலோ மான் இறைச்சியுடன் முச்சக்கர வண்டி ஒன்றையும், தராதி ஒன்றையும், மான் தலைகள் இரண்டையும் கைப்பற்றியதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வில்பத்து தேசிய வனாந்தர நிருவாகியின் ஆலோசனையின் பேரில் வனவிலங்கு அதிகாரிகள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.





